திருவருட்பா


இராமலிங்க அடிகள் (வள்ளலார்) அருளியது


முதல் திருமுறை

 


முதல் திருமுறை

சென்னைக் கந்தகோட்டம்
பன்னிரு சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
திருச்சிற்றம்பலம்

1.

திருஓங்கு புண்ணியச் செயல்ஓங்கி அன்பருள்
திறலோங்கு செல்வம்ஓங்கச்
செறிவோங்க அறிவோங்கி நிறைவான இன்பம்
திகழ்ந்தோங்க அருள்கொடுத்து
மருஓங்கு செங்கமல மலர்ஓங்கு வணம்ஓங்க
வளர்கருணை மயம்ஓங்கிஓர்
வரம்ஓங்கு தெள்அமுத வயம்ஓங்கி ஆனந்த
வடிவாகி ஓங்கிஞான
உருஓங்கும் உணர்வின்நிறை ஒளிஓங்கி ஓங்கும்மயில்
ஊர்ந்தோங்கி எவ்வுயிர்க்கும்
உறவோங்கும் நின்பதம்என் உளம்ஓங்கி வளம்ஓங்க
உய்கின்ற நாள்எந்தநாள்
தருஓங்கு சென்னையில் கந்தகோட் டத்துள்வளர்
தலம்ஓங்கு கந்தவேளே
தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
சண்முகத் தெய்வமணியே.

2.
பரம்ஏது வினைசெயும் பயன்ஏது பதிஏது
பசுஏது பாசம்ஏது
பத்திஏ தடைகின்ற முத்தியே தருள்ஏது
பாவபுண் யங்கள்ஏது
வரம்ஏது தவம்ஏது விரதம்ஏ தொன்றும்இலை
மனம்விரும் புணவுண்டுநல்
வத்திரம் அணிந்துமட மாதர்தமை நாடிநறு
மலர்சூடி விளையாடிமேல்
கரமேவ விட்டுமுலை தொட்டுவாழ்ந் தவரொடு
கலந்துமகிழ் கின்றசுகமே
கண்கண்ட சுகம்இதே கைகண்ட பலன்எனும்
கயவரைக் கூடாதருள்
தரமேவு சென்னையில் கந்தகோட் டத்துள்வளர்
தலம்ஓங்கு கந்தவேளே
தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
சண்முகத் தெய்வமணியே.

3.
துடிஎன்னும் இடைஅனம் பிடிஎன்னும் நடைமுகில்
துணைஎனும் பிணையல்அளகம்
சூதென்னும் முலைசெழுந் தாதென்னும் அலைபுனல்
சுழிஎன்ன மொழிசெய்உந்தி
வடிஎன்னும் விழிநிறையும் மதிஎன்னும் வதனம்என
மங்கையர்தம் அங்கம்உற்றே
மனம்என்னும் ஒருபாவி மயல்என்னும் அதுமேவி
மாள்கநான் வாழ்கஇந்தப்
படிஎன்னும் ஆசையைக் கடிஎன்ன என்சொல்இப்
படிஎன்ன அறியாதுநின்
படிஎன்ன என்மொழிப் படிஇன்ன வித்தைநீ
படிஎன்னும் என்செய்குவேன்
தடிதுன்னும் மதில்சென்னை கந்தகோட் டத்துள்வளர்
தலம்ஓங்கு கந்தவேளே
தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
சண்முகத் தெய்வமணியே.

4.
வள்ளல்உனை உள்ளபடி வாழ்த்துகின் றோர்தமை
மதித்திடுவ தன்றிமற்றை
வானவரை மதிஎன்னில் நான்அவரை ஒருகனவின்
மாட்டினும் மறந்தும்மதியேன்
கள்ளம்அறும் உள்ளம்உறும் நின்பதம்அ லால்வேறு
கடவுளர் பதத்தைஅவர்என்
கண்எதிர் அடுத்தைய நண்என அளிப்பினும்
கடுஎன வெறுத்துநிற்பேன்
எள்ளளவும் இம்மொழியி லேசுமொழி அன்றுண்மை
என்னை ஆண் டருள்புரிகுவாய்
என்தந்தை யேஎனது தாயேஎன் இன்பமே
என்றன்அறி வேஎன்அன்பே
தள்ளரிய சென்னையில் கந்தகோட் டத்துள்வளர்
தலம்ஓங்கு கந்தவேளே
தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
சண்முகத் தெய்வமணியே.

5.
பதிபூசை முதலநற் கிரியையால் மனம்எனும்
பசுகரணம் ஈங்கசுத்த
பாவனை அறச்சுத்த பாவனையில் நிற்கும்மெய்ப்
பதியோக நிலைமைஅதனான்
மதிபாசம் அற்றதின் அடங்கிடும் அடங்கவே
மலைவில்மெய்ஞ் ஞானமயமாய்
வரவுபோக் கற்றநிலை கூடும்என எனதுளே
வந்துணர்வு தந்தகுருவே
துதிவாய்மை பெறுசாந்த பதம்மேவு மதியமே
துரிசறு சுயஞ்சோதியே
தோகைவா கனமீ திலங்கவரு தோன்றலே
சொல்லரிய நல்லதுணையே
ததிபெறும் சென்னையிலக கந்தகோட் டத்துள்வளர்
தலமோங்கு கந்தவேளே
தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
சண்முகத் தெய்வமணியே.

6.
காமஉட் பகைவனும் கோபவெங் கொடியனும்
கனலோப முழுமுடனும்
கடுமோக வீணனும் கொடுமதம் எனுந்துட்ட
கண்கெட்ட ஆங்காரியும்
ஏமம்அறு மாச்சரிய விழலனும் கொலைஎன்
றியம்புபா தகனுமாம்இவ்
வெழுவரும் இவர்க்குற்ற உறவான பேர்களும்
எனைப்பற்றி டாமல்அருள்வாய்
சேமமிகு மாமறையின் ஓம்எனும் அருட்பதத்
திறன்அருளி மலயமுனிவன்
சிந்தனையின் வந்தனைஉ வந்தமெய்ஞ் ஞானசிவ
தேசிக சிகாரத்னமே
தாமம்ஒளிர் சென்னையில் கந்தகோட் டத்துள்வளர்
தலம்ஓங்கு கந்தவேளே
தண்முகத் துய்யமணி உண்முகர் சைவமணி
சண்முகத் தெய்வமணியே.

7.
நிலைஉறும் நிராசையாம் உயர்குலப் பெண்டிரொடு
நிகழ்சாந்த மாம்புதல்வனும்
நெறிபெறும் உதாரகுணம் என்னும்நற் பொருளும்மருள்
நீக்கும்அறி வாம்துணைவனும்
மலைவறு நிராங்கார நண்பனும் சுத்தமுறு
மனம்என்னும் நல்ஏவலும்
வருசகல கேவலம்இ லாதஇட மும்பெற்று
வாழ்கின்ற வாழ்வருளுவாய்
அலைஇலாச் சிவஞான வாரியே ஆனந்த
அமுதமே குமுதமலர்வாய்
அணிகொள்பொற் கொடிபசுங் கொடிஇரு புறம்படர்ந்
தழகுபெற வருபொன்மலையே
தலைவர்புகழ் சென்னையில் கந்தகோட் டத்துள்வளர்
தலம்ஓங்கு கந்தவேளே
தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
சண்முகத் தெய்வமணியே.

8.
ஒருமையுடன் நினதுதிரு மலரடி நினைக்கின்ற
உத்தமர்தம் உறவுவேண்டும்
உள்ஒன்று வைத்துப் புறம்பொன்று பேசுவார்
உறவுகல வாமைவேண்டும்
பெருமைபெறு நினதுபுகழ் பேசவேண் டும்பொய்மை
பேசா திருக்க்வேண்டும்
பெருநெறி பிடித்தொழுக வேண்டும்மத மானபேய்
பிடியா திருக்கவேண்டும்
மருவுபெண் ஆசையை மறக்கவே வேண்டும்உனை
மறவா திருக்கவேண்டும்
மதிவேண்டும் நின்கருணை நிதிவேண்டும் நோயற்ற
வாழ்வில்நான் வாழவேண்டும்
தருமமிகு சென்னையில் கந்தகோட் டத்துள்வளர்
தலம்ஓங்கு கந்தவேளே
தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
சண்முகத் தெய்வமணியே.

9.
ஈஎன்று நான்ஒருவர் இடம்நின்று கேளாத
இயல்பும்என் னிடம்ஒருவர்ஈ
திடுஎன்ற போதவர்க் கிலைஎன்று சொல்லாமல்
இடுகின்ற திறமும்இறையாம்
நீஎன்றும் எனைவிடா நிலையும்நான் என்றும்உள
நினைவிடா நெறியும்அயலார்
நிதிஒன்றும் நயவாத மனமும்மெய்ந் நிலைநின்று
நெகிழாத திடமும்உலகில்
சீஎன்று பேய்என்று நாய்என்று பிறர் தமைத்
தீங்குசொல் லாததெளிவும்
திரம்ஒன்று வாய்மையும் தூய்மையும் தந்துநின்
திருவடிக் காளாக்குவாய்
தாய்ஒன்று சென்னையில் கந்தகோட் டத்துள்வளர்
தலம்ஓங்கு கந்தவேளே
தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
சண்முகத் தெய்வமணியே.

10.
கரையில்வீண் கதைஎலாம் உதிர்கருங் காக்கைபோல்
கதறுவார் கள்ளுண்டதீக்
கந்தம்நா றிடஊத்தை காதம்நா றிடஉறு
கடும்பொய்இரு காதம்நாற
வரையில்வாய் கொடுதர்க்க வாதம்இடு வார்சிவ
மணங்கமழ் மலர்ப்பொன்வாய்க்கு
மவுனம்இடு வார்இவரை முடர்என ஓதுறு
வழக்குநல் வழக்கெனினும்நான்
உரையிலவர் தமையுறா துனதுபுகழ் பேசும்அவ
ரோடுறவு பெறஅருளுவாய்
உயர்தெய்வ யானையொடு குறவர்மட மானும்உள்
உவப்புறு குணக்குன்றமே
தரையில்உயர் சென்னையில் கந்தகோட் டத்துள்வளர்
தலம்ஓங்கு கந்தவேளே
தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
சண்முகத் தெய்வமணியே.

11.
நாம்பிரமம் நமைஅன்றி ஆம்பிரமம் வேறில்லை
நன்மைதீ மைகளும் இல்லை
நவில்கின்ற வாகிஆந் தரம்இரண்டினும்ஒன்ற
நடுநின்ற தென்றுவீணாள்
போம்பிரம நீதிகேட் போர்பிரமை யாகவே
போதிப்பர் சாதிப்பர்தாம்
புன்மைநெறி கைவிடார் தம்பிரமம் வினைஒன்று
போந்திடில் போகவிடுவார்
சாம்பிரம மாம்இவர்கள் தாம்பிரமம் எனும்அறிவு
தாம்புபாம் பெனும்அறிவுகாண்
சத்துவ அகண்டபரிபூரண காரஉப
சாந்தசிவ சிற்பிரம நீ
தாம்பிரிவில் சென்னையில் கந்தகோட் டத்துள்வளர்
தலம்ஓங்கு கந்தவேளே
தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
சண்முகத் தெய்வமணியே.

12.
பார்கொண்ட நடையில்வன் பசிகொண்டு வந்திரப்
பார்முகம் பார்த்திரங்கும்
பண்பும்நின் திருவடிக் கன்பும்நிறை ஆயுளும்
பதியும்நல் நிதியும்உணர்வும்
சீர்கொண்ட நிறையும்உட் பொறையும்மெய்ப் புகழும்நோய்த்
தீமைஒரு சற்றும்அணுகாத்
திறமும்மெய்த் திடமும்நல் இடமும்நின் அடியர்புகழ்
செப்புகின் றோர்அடைவர்காண்
கூர்கொண்ட நெட்டிலைக் கதிர்வேலும் மயிலும்ஒரு
இக்ழியங் கொடியும்விண்ணோர்
கோமான்தன் மகளும்ஒரு மாமான்தன் மகளும்மால்
கொண்டநின் கோலமறவேன்
தார்கொண்ட சென்னையில் கந்தகோட் டத்துள்வளர்
தலம்ஓங்கு கந்தவேளே
தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
சண்முகத் தெய்வமணியே.

13.
வன்பெரு நெருப்பினைப் புன்புழுப் பற்றுமோ
வானைஒரு மான்தாவுமோ
வலியுள்ள புலியைஓர் எலிசீறு மோபெரிய
மலையைஓர் ஈச்சிறகினால்
துன்புற அசைக்குமோ வச்சிரத் துண்ஒரு
துரும்பினால் துண்டமாமோ
சூரியனை இருள்வந்து சூழுமோ காற்றில்மழை
தோயுமோ இல்லைஅதுபோல்
அன்புடைய நின்அடியர் பொன்அடியை உன்னும்அவர்
அடிமலர் முடிக்கணிந்தோர்க்
கவலமுறு மோகாமம் வெகுளிஉறு மோமனத்
தற்பமும்வி கற்பம்உறுமோ
தன்புகழ்செய் சென்னையில் கந்தகோட் டத்துள்வளர்
தலம்ஓங்கு கந்தவேளே
தன்முகத் துய்யமணி உன்முகச் சைவமணி
சண்முகத் தெய்வமணியே.

14.
காணலிடை நீரும்ஒரு கட்டையில் கள்வனும்
காண்உறு கயிற்றில் அறவும்
கடிதரு கிளிஞ்சிலிடை வெள்ளியும் பொன்னைக்
கதித்தபித் தளையின்இடையும்
மானலில் கண்டுள மயங்கல்போல் கற்பனையை
மாயையில் கண்டுவிணே
மனைஎன்றும் மகவென்றும் உறவென்றும் நிதிஎன்றும்
வாள்வென்றும் மானம்என்றும்
ஊனலின் உடம்பென்றும் உயிரென்றும் உளம்என்றும்
உள்என்றும் வெளிஎன்றும்வான்
உலகென்றும் அளவுறுவி காரம்உற நின்றஎனை
உண்மைஅறி வித்தகுருவே
தானமிகு சென்னையில் கந்தகோட் டத்துள்வளர்
தலம்ஓங்கு கந்தவேளே
தன்முகத் துய்யமணி உன்முகச் சைவமணி
சண்முகத் தெய்வமணியே.

15.
கற்றொளிகொள் உணர்வினோர் வேண்டாத இப்பெருங்
கன்மவுட லில்பருவம்நேர்
கண்டழியும் இளமைதான் பகல்வேட மோபுரைக்
கடல்நீர்கொ லோகபடமோ
உற்றொளியின் வெயில்இட்ட மஞ்சளோ வான்இட்ட
ஒருவிலோ நீர்க்குமிழியோ
உரைஅனல் பெறக்காற்றுள் ஊதும் துரத்தியோ
உன்றும்அறி யேன் இதனைநான்
பற்றுறுதி யாக்கொண்டு வனிதையர்கண் வலையினில்
பட்டுமதி கெட்டுழன்றே
பாவமே பயில்கின்ற தல்லாது நின்அடிப்
பற்றணுவும் உற்றறிகிலேன்
சற்றைஅகல் சென்னையில் கந்தகோட் டத்துள்வளர்
தலம்ஓங்கு கந்தவேளே
தன்முகத் துய்யமணி உன்முகச் சைவமணி
சண்முகத் தெய்வமணியே.

16.
சடமாகி இன்பம் தராதாகி மிகுபெருஞ்
சஞ்சலா காரமாகிச்
சற்றாகி வெளிமயல் பற்றாகி ஓடும்இத்
தன்மைபெறு செல்வமந்தோ
விடமாகி ஒருகபட நடமாகி யாற்றிடை
விரைந்துசெலும் வெள்ளம்ஆகி
வேலைஅலை யாகிஆங் காரவலை யாகிமுதிர்
வேனில்உறு மேகம்ஆகிக்
கடமாய சகடமுறு காலாகி நீடுவாய்க்
காலோடும் நீராகியே
கற்விலா மகளிர்போல் பொற்பிலா துழலும்இது
கருதாத வகைஅருளுவாய்
தடமேவு சென்னையில் கந்தகோட் டத்துள்வளர்
தலம்ஓங்கு கந்தவேளே
தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
சண்முகத் தெய்வமணியே.

17.
உப்புற்ற பாண்டம்என ஒன்பது துவாரத்துள்
உற்றசும் பொழுகும்உடலை
உயர்கின்ற வானிடை எறிந்தகல் என்றும்மலை
உற்றிழியும் அருவிஎன்றும்
வெப்புற்ற காற்றிடை விளக்கென்றும் மேகம்உறு
மின்என்றும் வீசுகாற்றின்
மேற்பட்ட பஞ்சென்றும் மஞ்சென்றும் வினைதந்த
வெறுமாய வேடம்என்றும்
கப்புற்ற பறவைக் குடம்பைஎன் றும்பொய்த்த
கனவென்றும் நீரில்எழுதும்
கைஎழுத் தென்றும்உட் கண்டுகொண் டதிலாசை
கைவிடேன் என்செய்குவேன்
தப்பற்ற சென்னையில் கந்தகோட் டத்துள்வளர்
தலம்ஓங்கு கந்தவேளே
தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
சண்முகத் தெய்வமணியே.

18.
எந்தைநினை வாழ்த்தாத பேயர்வாய் கூழுக்கும்
ஏக்கற்றி ருக்கும்வெறுவாய்
எங்கள்பெரு மான்உனை வணங்காத மூடர்தலை
இகழ்விற கெடுக்கும்தலை
கந்தமிகு நின்மேனி காணாத கயவர்கண்
கலநீர் சொரிந்தஅழுகண்
கடவுள்நின் புகழ்தனைக் கேளாத வீணர்செவி
கைத்திழவு கேட்கும்செவி
பந்தம்அற நினைஎணாப் பாவிகள் தம்நெஞ்சம்
பகீர்என நடுங்கும்நெஞ்சம்
பரமநின் திருமுன்னர் குவியாத வஞ்சர்கை
பலிஏற்க நீள்கொடுங்கை
சந்தமிகு சென்னையில் கந்தகோட் டத்துள்வளர்
தலம்ஓங்கு கந்தவேளே
தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
சண்முகத் தெய்வமணியே.

19.
ஐயநின் சீர்பேசு செல்வர்வாய் நல்லதெள்
அழுதுண் டுவந்ததிருவாய்
அப்பநின் திருவடி வணங்கினோர் தலைமுடி
அணிந்தோங்கி வாழுந்தலை
மெய்யநின் திருமேனி கண்டபுண் ணியர்கண்கள்
மிக்கஒளி மேவுகண்கள்
வேலநின் புகழ்கேட்ட வித்தகர் திருச்செவி
விழாச்சுபம் கேட்கும்செவி
துய்யநின் பதம்எண்ணும் மேலோர்கன் நெஞ்சம்மெய்ச்
சுகருப மானநெஞ்சம்
தோன்றல்உன் திருமுன் குவித்தபெரி யோர்கைகன்
சுவர்ன்னமிடு கின்றகைகள்
சையம்உயர் சென்னையில் கந்தகோட் டத்துள்வளர்
தலம்ஓங்கு கந்தவேளே
தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
சண்முகத் தெய்வமணியே.

20.
உழல்உற்ற உழவுமுதல் உறுதொழில் இயற்றிமலம்
ஒத்தபல பொருள்ஈட்டிவீண்
உறுவயிறு நிறையவெண் சோறடைத் திவ்வுடலை
ஒதிபோல் வளர்த்துநாளும்
விழல்உற்ற வாழ்க்கையை விரும்பினேன் ஐயஇவ்
வெய்யஉடல் பொய்என்கிலேன்
வெளிமயக் கோமாய விடமயக் கோஎனது
விதிமயக் கோஅறிகிலேன்
கழல்உற்ற நின்துணைக் கால்மலர் வணங்கிநின்
கருணையை விழைந்துகொண்டெம்
களைகணே ஈராறு கண்கொண்ட என்றன்இரு
கண்ணேஎ னப்புகழ்கிலேன்
தழைவுற்ற சென்னையில் கந்தகோட் டத்துள்வளர்
தலம்ஓங்கு கந்தவேளே
தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
சண்முகத் தெய்வமணியே.

21.
வானம்எங் கேஅமுத பானம்எங்கே அமரர்
வாழ்க்கைஅபி மானம்எங்கே
மாட்சிஎங் கேஅவர்கள் சூழ்ச்சிஎங் கேதேவ
மன்னன்அர சாட்சிஎங்கே
ஞானம்எங் கேமுனிவர் மோனம்எங் கேஅந்த
நான்முகன் செய்கைஎங்கே
நாரணன் காத்தலை நடத்தல்எங் கேமறை
நவின்றிடும் ஒழுக்கம்எங்கே
ஈனம்அங் கேசெய்த தாருகனை ஆயிர
இலக்கம்உறு சிங்கமுகனை
எண்அரிய திறல்பெற்ற சூரனை மறக்கருணை
ஈந்துபணி கொண்டிலைஎனில்
தானமிங் கேர்சென்னை கந்தகோட் டத்துள்வளர்
தலம்ஓங்கு கந்தவேளே
தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
சண்முகத் தெய்வமணியே.

22.
மனமான ஒருசிறுவன் மதியான குருவையும்
மதித்திடான் நின் அடிச்சீர்
மகிழ்கல்வி கற்றிடான் சும்மாஇ ரான்காம
மடுவினிடை வீழ்ந்துசுழல்வான்
சிவமான வெஞ்சுரத் துழலுவன் உலோபமாம்
சிறுகுகையி னுட்புகுவான்
செறுமோக இருளிடைச் செல்குவான் மதம்எனும்
செய்குன்றில் ஏறிவிழுவான்
இனமான மாச்சரிய வெங்குழியின் உள்ளே
இறங்குவான் சிறிதும்அந்தோ
என்சொல்கே ளான்எனது கைப்படான் மற்றிதற்
கேழையேன் என்செய்குவேன்
தனநீடு சென்னையில் கந்தகோட் டத்துள்வளர்
தலம்ஓங்கு கந்தவேளே
தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
சண்முகத் தெய்வமணியே.

23.
வாய்கொண் டுரைத்தல்அரி தென்செய்கேன் என்செய்கேன்
வள்ளல்உன் சேவடிக்கண்
மன்னாது பொன்னாசை மண்ணாசை பெண்ணாசை
பேய்கொண்டு கள்உண்டு கோலினால் மொத்துண்டு
பித்துண்ட வன்குரங்கோ
பேசுறு குலாலனாற் சுழல்கின்ற திகிரியோ
பேதைவிளை யாடுபந்தோ
காய்கொண்டு பாய்கின்ற வெவ்விலங் கோபெருங்
காற்றினாற் சுழல்கறங்கோ
காலவடி வோஇந்திர ஜாலவடி வோஎனது
கர்மவடி வோஅறிகிலேன்
தாய்கொண்ட சென்னையில் கந்தகோட் டத்துள்வளர்
தலம்ஓங்கு கந்தவேளே
தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
சண்முகத் தெய்வமணியே.

24.
கற்றமே லவரொடும் கூடிநில் லேன்கல்வி
கற்கும்நெறி தேர்ந்துகல்லேன்
கனிவுகொண் டுனதுதிரு அடியைஒரு கனவினும்
கருதிலேன் நல்லன்அல்லேன்
குற்றமே செய்வதென் குணமாகும் அப்பெருங்
குற்றம்எல் லாம்குணம்எனக்
கொள்ளுவது நின்அருட்குணமாகும் என்னில்என்
குறைதவிர்த் தருள்புரிகுவாய்
பெற்றமேல் வரும்ஒரு பெருந்தகையின் அருள்உருப்
பெற்றெழுந் தோங்குசுடரே
பிரணவா காராரின் மயவிமல சொருபமே
பேதமில் பரப்பிரமமே
தற்றகைய சென்னையில் கந்தகோட் டத்துள்வளர்
தலம்ஓங்கு கந்தவேளே
தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
சண்முகத் தெய்வமணியே.

25.
பாய்ப்பட்ட புலிஅன்ன நாய்ப்பட்ட கயவர்தம்
பாழ்பட்ட மனையில்நெடுநாள்
பண்பட்ட கழுநீரும் விண்பட்ட இன்னமுது
பட்டபா டாகும்அன்றிப்
போய்ப்பட்ட புல்லுமணி புப்பட்ட பாடும்நற்
புண்பட்ட பாடுதவிடும்
புன்பட்ட உமியும்உயர் பொன்பட்ட பாடவர்கள்
போகம்ஒரு போகமாமோ
ஆய்ப்பட்ட மறைமுடிச் சேய்ப்பட்ட நின்அடிக்
காட்பட்ட பெருவாழ்விலே
அருள்பட்ட நெறியும்மெய்ப் பொருள்பட்ட நிலையும்உற
அமர்போக மேபோகமாம்
தாய்ப்பட்ட சென்னையில் கந்தகோட் டத்துள்வளர்
தலம்ஓங்கு கந்தவேளே
தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
சண்முகத் தெய்வமணியே.

26.
சேவலம் கொடிகொண்ட நினைஅன்றி வேறுசிறு
தேவரைச் சிந்தைசெய்வோர்
செங்கனியை விட்டுவேப் பங்கனியை உண்ணும்ஒரு
சிறுகருங் காக்கைநிகர்வார்
நாவலங் காரம்அற வேறுபுகழ் பேசிநின்
நற்புகழ் வழுத்தாதபேர்
நாய்ப்பால் விரும்பிஆன் துய்ப்பாலை நயவாத
நவையுடைப் பேயர் ஆவார்
நீவலந் தரநினது குற்றேவல் புரியாது
நின்றுமற் றேவல்புரிவோர்
நெல்லுக் கிறைக்காது புல்லுக் கிறைக்கின்ற
நெடியவெறு வீணராவார்
தாவலம் சென்னையில் கந்தகோட் டத்துள்வளர்
தலம்ஓங்கு கந்தவேளே
தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
சண்முகத் தெய்வமணியே.

27.
பிரமன்இனி என்னைப் பிறப்பிக்க வல்லனோ
பெய்சிறையில் இன்னும்ஒருகால்
பின்பட்டு நிற்குமோ முன்பட்ட சூட்டில்
பெறுந்துயர் மறந்துவிடுமோ
இரவுநிறம் உடைஅயமன் இனிஎனைக் கனவினும்
இறப்பிக்க எண்ணம்உறுமோ
எண்ணுறான் உதைஉண்டு சிதைஉண்ட தன்உடல்
இருந்தவடு எண்ணுறானோ
கரவுபெறு வினைவந்து நலியுமோ அதனைஒரு
காசுக்கும் மதியேன்எலாம்
கற்றவர்கள் பற்றும்நின் திருஅருளை யானும்
கலந்திடப் பெற்றுநின்றேன்
தரமருவு சென்னையில் கந்தகோட் டத்துள்வளர்
தலம்ஓங்கு கந்தவேளே
தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
சண்முகத் தெய்வமணியே.

28.
நீர்உண்டு பொழிகின்ற கார்உண்டு விளைகின்ற
நிலன்உண்டு பலனும்உண்டு
நிதிஉண்டு துதிஉண்டு மதிஉண்டு கதிகொண்ட
நெறிஉண்டு நிலையும் உண்டு
ஊர்உண்டு பேர்உண்டு மணிஉண்டு பணிஉண்டு
உடைஉண்டு கொடையும்உண்டு
உண்டுண்டு மகிழவே உணவுண்டு சாந்தம்உறும்
உளம்உண்டு வளமும்உண்டு
தேர்உண்டு கரிஉண்டு பரிஉண்டு மற்றுள்ள
செல்வங்கள் யாவும்உண்டு
தேன்உண்டு வண்டுறு கடம்பணியும் நின்பதத்
தியானமுண் டாயில்அரசே
தார்உண்ட சென்னையில் கந்தகோட் டத்துள்வளர்
தலம்ஓங்கு கந்தவேளே
தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
சண்முகத் தெய்வமணியே.

29.
உளம்எனது வசம்நின்ற தில்லைஎன் தொல்லைவினை
ஒல்லைவிட் டிடவுமில்லை
உன்பதத் தன்பில்லை என்றனக் குற்றதுணை
உனைஅன்றி வேறும்இல்லை
இளையன்அவ னுக்கருள வேண்டும்என் றுன்பால்
இசைக்கின்ற பேரும்இல்லை
ஏழையவ னுக்கருள்வ தேன்என்றுன் எதிர்நின்
றியம்புகின் றோரும்இல்லை
வளமருவும் உனதுதிரு அருள்குறைவ தில்லைமேல்
மற்றொரு வழக்கும்இல்லை
வந்திரப் போர்களுக் கிலைஎன்ப தில்லைநீ
வன்மனத் தவனும்அல்லை
தளர்விலாச் சென்னையில் கந்தகோட் டத்துள்வளர்
தலம்ஓங்கு கந்தவேளே
தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
சண்முகத் தெய்வமணியே.

30.
எத்திக்கும் என்உளம் தித்திக்கும் இன்பமே
என்உயிர்க் குயிராகும்ஓர்
ஏகமே ஆனந்த போகமே யோகமே
என்பெருஞ் செல்வமேநன்
முத்திக்கு முதலான முதல்வனே மெய்ஞ்ஞான
முர்த்தியே முடிவிலாத
முருகனே நெடியமால் மருகனே சிவபிரான்
முத்தாடும் அருமைமகனே
பத்திக் குவந்தருள் பரிந்தருளும் நின்அடிப்
பற்றருளி என்னைஇந்தப்
படியிலே உழல்கின்ற குடியிலே ஒருவனாப்
பண்ணாமல் ஆண்டருளுவாய்
சத்திக்கும் நீர்ச்சென்னை கந்தகோட் டத்துள்வளர்
தலம்ஓங்கு கந்தவேளே
தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
சண்முகத் தெய்வமணியே.


31.
நான்கொண்ட விரதம்நின் அடிஅலால் பிறர்தம்மை
நாடாமை ஆகும்இந்த
நல்விரத மாம்கனியை இன்மைஎனும் ஒருதுட்ட
நாய்வந்து கவ்விஅந்தோ
தான்கொண்டு போவதினி என்செய்வேன் என்செய்வேன்
தளராமை என்னும்ஒருகைத்
தடிகொண் டடிக்கவோ வலியிலேன் சிறியனேன்
தன்முகம் பார்த்தருளுவாய்
வான்கொண்ட தெள்அமுத வாரியே மிகுகருனை
மழையே மழைக்கொண்டலே
வள்ளலே என்இருகண் மணியேஎன் இன்பமே
மயில்ஏறு மாணிக்கமே
தான்கொண்ட சென்னையில் கந்தகோட் டத்துள்வளர்
தலம்ஓங்கு கந்தவேளே
தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
சண்முகத் தெய்வமணியே.

திருச்சிற்றம்பலம்.

சென்னைக் கந்தகோட்டம்
எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
திருச்சிற்றம்பலம்

32.

அருளார் அமுதே சரணம் சரணம்
அழகா அமலா சரணம் சரணம்
பொருளா எனைஆள் புனிதா சரணம்
பொன்னே மணியே சரணம் சரணம்
மருள்வார்க் கரியாய் சரணம் சரணம்
மயில்வா கனனே சரணம் சரணம்
கருணா லயனே சரணம் சரணம்
கந்தா சரணம் சரணம் சரணம்

33.

எண்ணேர் மறையின் பயனே சரணம்
பதியே பரமே சரணம் சரணம்
விண்ணேர் ஒளியே வெளியே சரணம்
வெளியின் விளைவே சரணம் சரணம்
உண்ணேர் உயிரே உணர்வே சரணம்
உருவே அருவே உறவே சரணம்
கண்ணே மணியே சரணம் சரணம்
கந்தா சரணம் சரணம் சரணம்

34.

முடியா முதலே சரணம் சரணம்
முருகா குமரா சரணம் சரணம்
வடிவேல் அரசே சரணம் சரணம்
மயிலூர் மணியே சரணம் சரணம்
அடியார்க் கெளியாய் சரணம் சரணம்
அரியாய் பெரியாய் சரணம் சரணம்
கடியாக் கதியே சரணம் சரணம்
கந்தா சரணம் சரணம் சரணம்

35.

பூவே மணமே சரணம் சரணம்
பொருளே அருளே சரணம் சரணம்
கோவே குகனே சரணம் சரணம்
குருவே திருவே சரணம் சரணம்
தேவே தெளிவே சரணம் சரணம்
சிவசண் முகனே சரணம் சரணம்
காவேர் தருவே சரணம் சரணம்
கந்தா சரணம் சரணம் சரணம்

36.

நடவும் தனிமா மயிலோய் சரணம்
நல்லார் புகழும் வல்லோய் சரணம்
திடமும் திருவும் தருவோய் சரணம்
தேவர்க் கரியாய் சரணம் சரணம்
தடவண் புயனே சரணம் சரணம்
தனிமா முதலே சரணம் சரணம்
கடவுள் மணியே சரணம் சரணம்
கந்தா சரணம் சரணம் சரணம்

37.

கோலக் குறமான் கணவா சரணம்
குலமா மணியே சரணம் சரணம்
சீலத் தவருக் கருள்வோய்சரணம்
சிவனார் புதல்வா சரணம் சரணம்
ஞாலத் துயர்தீர் நலனே சரணம்
நடுவா கியநல் ஒளியே சரணம்
காலன் தெறுவோய் சரணம் சரணம்
கந்தா சரணம் சரணம் சரணம்

38.

நங்கட் கிளியாய் சரணம் சரணம்
நந்தா உயர்சம் பந்தா சரணம்
திங்கட் சடையான் மகனே சரணம்
சிவைதந் தருளும் புதல்வா சரணம்
துங்கச் சுகம்நன் றருள்வோய் சரணம்
சுரர்வாழ்த் திடுநம் துரையே சரணம்
கங்கைக் கொருமா மதலாய் சரணம்
கந்தா சரணம் சரணம் சரணம்

39.
ஒளியுள் ஒளியே சரணம் சரணம்
ஒன்றே பலவே சரணம் சரணம்
தெளியும் தெருளே சரணம் சரணம்
சிவமே தவமே சரணம் சரணம்
அளியும் கனியே சரணம் சரணம்
அமுதே அறிவே சரணம் சரணம்
களியொன் றருள்வோய் சரணம் சரணம்
கந்தா சரணம் சரணம் சரணம்

40.

மன்னே எனைஆள் வரதா சரணம்
மதியே அடியேன் வாழ்வே சரணம்
பொன்னே புனிதா சரணம் சரணம்
புகழ்வார் இதயம் புகுவாய் சரணம்
அன்னே வடிவேல் அரசே சரணம்
அறுமா முகனே சரணம் சரணம்
கன்னேர் புயனே சரணம் சரணம்
கந்தா சரணம் சரணம் சரணம்

41.

வேதப் பொருளே சரணம் சரணம்
விண்ணோர் பெருமாள் சரணம் சரணம்
போதத் திறனே சரணம் சரணம்
புனைமா மயிலோய் சரணம் சரணம்
நாதத் தொலியே சரணம் சரணம்
நவைஇல் லவனே சரணம் சரணம்
காதுக் கினிதாம் புகழோய் சரணம்
கந்தா சரணம் சரணம் சரணம்

திருச்சிற்றம்பலம்.

3.
பிரார்த்தனை மாலை
கட்டளைக் கலித்துறை

திருச்சிற்றம்பலம்

42.
சீர்கொண்ட தெய்வ வதனங்கள் ஆறும் திகழ்கடப்பந்
தார்கொண்ட பன்னிரு தோள்களும் தாமரைத் தாள்களும்ஓர்
கூர்கொண்ட வேலும் மயிலும்நற் கோழிக் கொடியும்அருட்
கார்கொண்ட வண்மைத் தணிகா சலமும்என் கண்ணுற்றதே1.

43.
கண்முன் றுறுசெங் கரும்பின்முத் தேபதம் கண்டிடுவான்
மண்முன் றுலகும் வழுத்தும் பவள மணிக்குன்றமே
திண்முன்று நான்கு புயங்கொண் டொளிர்வச் சிரமணியே
வண்முன் றலர்மலை வாழ்மயில் ஏறிய மாணிக்கமே.

44.
மாணித்த ஞான மருந்தேஎன் கண்ணின்உள் மாமணியே
ஆணிப்பொன் னேஎன தாருயி ரேதணி காசலனே
தாணிற்கி லேன்நினைத் தாழாத வஞ்சர் தமதிடம்போய்ப்
பேணித் திரிந்தனன் அந்தோஎன் செய்வன்இப் பேதையனே.

45.
அன்னே எனைத்தந்த அப்பாஎன் றேங்கி அலறுகின்றேன்
என்னேஇவ் வேழைக் கிரங்காது நீட்டித் திருத்தல்எந்தாய்
பொன்னே சுகுணப் பொருப்பே தணிகைப் பொருப்பமர்த்த
மன்னே கலப மயில்மேல் அழகிய மாமணியே.

46.
மணியே தினைப்புன வல்லியை வேண்டி வளர்மறைவான்
கணியே எனநின்ற கண்ணே என்உள்ளக் களிநறவே
பணியேன் எனினும் எனைவலிந் தாண்டுன் பதந்தரவே
நணியே தணிகைக்கு வாஎன ஓர்மொழி நல்குவையே.

47.
நல்காத ஈனர்தம் பாற்சென் றிரந்து நவைப்படுதல்
மல்காத வண்ணம் அருள்செய்கண் டாய்மயில் வாகனனே
பல்காதல் நீக்கிய நல்லோர்க் கருளும் பரஞ்சுடரே
அல்காத வண்மைத் தணிகா சலத்தில் அமர்ந்தவனே.

48.
அமரா வதிஇறைக் காருயிர் ஈந்த அருட்குன்றமே
சமரா புரிக்கர சேதணி காசலத் தற்பரனே
குமரா பரம குருவே குகாஎனக் கூவிநிற்பேன்
எமராஜன் வந்திடுங் கால்ஐய னேஎனை ஏன்றுகொள்ளே.

49.
கொள்உண்ட வஞ்சர்தம் கூட்டுண்டு வாழ்க்கையில் குட்டுண்டுமேல்
துள்உண்ட நோயினில் சூடுண்டு மங்கையர் தோய்வெனும்ஓர்
கள்உண்ட நாய்க்குன் கருணைஉண் டோ நற் கடல்அமுதத்
தெள்உண்ட தேவர் புகழ்தணி காசலச் சிற்பரனே.

50.
சிற்பகல் மேவும்இத் தேகத்தை ஒம்பித் திருஅனையார்
தற்பக2 மேவிலைந் தாழ்ந்தேன் தணிகை தனில்அமர்ந்த
கற்பக மேநின் கழல்கரு தேன்இக் கடைப்படும்என்
பொற்பகம் மேவிய நின்அருள் என்என்று போற்றுவதே.

51.
போற்றேன் எனினும் பொறுத்திடல் வேண்டும் புவிநடையாம்
சேற்றே விழுந்து தியங்குகின் றேனைச் சிறிதும்இனி
ஆற்றேன் எனதர சேஅமு தேஎன் அருட்செல்வமே
மேற்றேன் பெருகு பொழில்தணி காசல வேலவனே.

52.
வேல்கொண்ட கையும் விறல்கொண்ட தோளும் விளங்குமயில்
மேல்கொண்ட வீறும் மலர்முகம் ஆறும் விரைக்கமலக்
கால்கொண்ட வீரக் கழலும்கண் டால்அன்றிக் காமன்எய்யும்
கோல்கொண்ட வன்மை அறுமோ தணிகைக் குருபரனே.

53.
குருவே அயன்அரி ஆதியர் போற்றக் குறைதவிர்ப்பான்
வருவேல் பிடித்து மகிழ்வள்ள லேகுண மாமலையே
தருவே தணிகைத் தயாநிதி யேதுன்பச் சாகரமாம்
கருவேர் அறுத்திக் கடையனைக் காக்கக் கடன்உனக்கே.

54.
உனக்கே விழைவுகொண் டோ லமிட் டோ ங்கி உலறுகின்றேன்
எனக்கே அருள்இத் தமியேன் பிழைஉளத் தெண்ணியிடேல்
புனக்கேழ் மணிவல்லி யைப்புணர்ந் தாண்டருள் புண்ணியனே
மனக்கேத மாற்றும் தணிகா சலத்தமர் வானவனே.

55.
வானோர் குடிகளை வாழ்வித்த தெய்வ மணிச்சுடரே
நானோர்எளியன்என் துன்பறுத் தாள்என நண்ணிநின்றேன்
ஏனோநின் நெஞ்சம் இரங்காத வண்ணம் இருங்கணிப்பூந்
தேனோ டருவி பயிலும் தணிகைச் சிவகுருவே.

56.
கையாத துன்பக் கடல்முழ்கி நெஞ்சம் கலங்கிஎன்றன்
ஐயாநின் பொன்அடிக் கோலமிட் டேன்என்னை ஆண்டுகொளாய்
மையார் தடங்கண் மலைமகள் கண்டு மகிழ்செல்வமே.
செய்யார் தணிகை மலைஅர சேஅயிற் செங்கையனே.

57.
செங்கைஅம் காந்தன் அனையமின் னார்தம் திறத்துழன்றே
வெங்கயம் உண்ட விளவாயி னேன்விறல் வேலினைஓர்
அங்கையில் ஏந்திய ஐயா குறவர் அரிதில்பெற்ற
மங்கை மகிழும் தணிகேச னேஅருள் வந்தெனக்கே.

58.
கேளாது போல்இருக் கின்றனை ஏழைஇக் கீழ்நடையில்
வாளா இடர்கொண் டலறிடும் ஓலத்தை மாமருந்தே
தோளா மணிச்சுட ரேதணி காசலத் து'ய்ப்பொருளே
நாளாயின் என்செய்கு வேன்இறப் பாய நவைவருமே.

59.
நவையே தருவஞ்ச நெஞ்சகம் மாயவும் நான்உன்அன்பர்
அவையே அணுகவும் ஆனந்த வாரியில் ஆடிடவும்
சுவையே அமுதன்ன நின்திரு நாமம் துதிக்கவும்ஆம்
இவையேஎன் எண்ணம் தணிகா சலத்துள் இருப்பவனே.

60.
இருப்பாய மாய மனத்தால் வருந்தி இளைத்துநின்றேன்
பொருப்பாய கன்மப் புதுவாழ்வில் ஆழ்ந்தது போதும்இன்றே
கருப்பாழ் செயும்உன் சுழல்அடிக் கேஇக் கடையவனைத்
திருப்பாய் எனில்என்செய் கேன்தணி காசலத் தெள்ளமுதே.

61.
தெள்அகத் தோங்கிய செஞ்சுட ரேசிவ தேசிகனே
கள்அகத் தேமலர்க் காஆர் தணிகைஎங் கண்மணியே
என்அகத் தேஉழன் றென்நின் றலைத்தெழுந் திங்கும்அங்கும்
துள்அகத் தேன்சிரம் சேரும்கொ லோநின் துணைஅடியே.

62.
அடியேன் எனச்சொல்வ தல்லாமல் தாள்அடைந் தாரைக்கண்டே
துடியேன் அருண கிரிபாடும் நின்அருள் தோய்புகழைப்
படியேன் பதைத்துரு கேன்பணி யேன்மனப் பந்தம்எலாம்
கடியேன் தணிகையைக் காணேன்என் செய்வேன்எம் காதலனே.

63.
தலனே அடியர் தனிமன மாம்புகழ் சார்தணிகா
சலனே அயன்அரி ஆதியர் வாழ்ந்திடத் தாங்கயில்வேல்
வலனேநின் பொன்அருள் வாரியின் முழ்க மனோலயம்வாய்ந்
திலனேல் சனன மரணம்என் னும்கடற் கென்செய்வனே.

64.
என்செய்கை என்செய்கை எந்தாய்நின் பொன்அடிக் கேஅலங்கல்
வன்செய்கை நீங்க மகிழ்ந்தணி யேன்துதி வாய்உரைக்க
மென்செய்கை கூப்ப விழிநீர் துளித்திட மெய்சிலிர்க்கத்
தன்செய்கை என்பதற் றேதணி காசலம் சார்ந்திலனே.

65.
சாரும் தணிகையில் சார்ந்தோய்நின் தாமரைத் தாள்துணையைச்
சேரும் தொழும்பா திருப்பதம் அன்றிஇச் சிற்றடியேன்
ஊரும் தனமும் உறவும் புகழும் உரைமடவார்
வாருந் தணிமுலைப் போகமும் வேண்டிலன் மண்விண்ணிலே.

66.
மண்நீர் அனல்வளி வான்ஆகி நின்றருள் வத்துஎன்றே
தெண்நீர்மை யால்புகழ் மால்அய னேமுதல் தேவர்கள்தம்
கண்நீர் துடைத்தருள் கற்பக மேஉனைக் கண்டுகொண்டேன்
தண்நீர் பொழிற்கண் மதிவந் துலாவும் தணிகையிலே.

67.
தணியாத துன்பத் தட்ங்கடல் நீங்கநின் தன்மலர்த்தாள்
பணியாத பாவிக் கருளும்உண் டோ பசு பாசம்அற்றோர்க்
கணியாக நின்ற அருட்செல்வ மேதணி காசலனே
அணிஆ தவன்முத லாம்அட்ட முர்த்தம் அடைந்தவனே.

68.
அடையாத வஞ்சகர் பால்சென் றிரந்திங் கலைந்தலைந்தே
கடையான நாய்க்குள் கருணைஉண் டோ தணி கைக்குள்நின்றே
உடையாத நல்நெஞ்சர்க் குண்மையைக் காண்பிக்கும் உத்தமனே
படையாத தேவர் சிறைமீட் டளித்தருள் பண்ணவனே.

69.
பண்ணவ னேநின் பதமலர் ஏத்தும் பயன்உடையோர்
கண்ணவ னேதணி காசல னேஅயில் கையவனே
விண்ணவர் ஏத்திய மேலவ னேமயல் மேவுமனம்
புண்ணவ னேனையும் சேர்ந்தாய்என் னேஉன்றன் பொன்அருளே.

70.
பொன்ஆர் புயத்தனும் பூஉடை யோனும் புகழ்மணியே
என்ஆவி யின்துணை யேதணி காசலத் தேஅமர்ந்த
மன்னாநின் பொன்அடி வாழ்த்தாது வீணில் வருந்துறுவேன்
இன்னா இயற்றும் இயமன்வந் தால்அவற் கென்சொல்வனே.

71.
சொல்லார் மலர்புனை அன்பகத் தோர்க்கருள் சொல்லும்எல்லாம்
வல்லாய்என் றேத்த அறிந்தேன் இனிஎன்றன் வல்வினைகள்
எல்லாம் விடைகொண் டிரியும்என் மேல்இய மன்சினமும்
செல்லாது காண்ஐய னேதணி காசலச் சீர்அரைசே.

திருச்சிற்றம்பலம்.

4.
எண்ணப் பத்து
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
திருச்சிற்றம்பலம்.

72.
அணிகொள் வேல்உடை அண்ணலே நின்திரு அடிகளை அன்போடும்
பணிகி லேன்அகம் உருகிநின் றாடிலேன் பாடிலேன் மனமாயைத்
தணிகி லேன்திருத் தணிகையை நினைகிலேன் சாமிநின் வழிபோகத்
துணிகி லேன்இருந் தென்செய்தேன் பாவியேன் துன்பமும் எஞ்சேனே.

73.
சேல்பி டித்தவன் தந்தைஆ தியர்தொழும் தெய்வமே சிவப்பேறே
மால்பி டித்தவர் அறியொனாத் தணிகைமா மலைஅமர்ந் திடுவாழ்வே
வேல்பி டித்தருள் வள்ளலே யான்சதுர் வேதமும் காணாநின்
கால்பி டிக்கவும் கருணைநீ செய்யவும் கண்டுகண் களிப்பேனோ.

74.
களித்து நின்திருக் கழலிணை ஏழையேன் காண்பனோ அலதன்பை
ஒளித்து வன்துயர் உழப்பனோ இன்னதென் றுணர்ந்திலேன் அருட்போதம்
தெளித்து நின்றிடும் தேசிக வடிவமே தேவர்கள் பணிதேவே
தளிர்த்த தண்பொழில் தணிகையில் வளர்சிவ தாருவே மயிலோனே.

75.
மயிலின் மீதுவந் தருள்தரும் நின்றிரு வரவினுக் கெதிர்பார்க்கும்
செயலி னேன்கருத் தெவ்வணம் முடியுமோ தெரிகிலேன் என்செய்கேன்
அயிலின் மாமுதல் தடிந்திடும் ஐயனே ஆறுமா முகத்தேவே
கயிலை நேர்திருத் தணிகைஅம் பதிதனில் கந்தன்என் றிருப்போனே.

76.
இருப்பு நெஞ்சகக் கொடியனேன் பிழைதனை எண்ணுறேல் இனிவஞ்சக்
கருப்பு காவணம் காத்தருள் ஐயனே கருணைஅம் கடலேஎன்
விருப்புள் ஊறிநின் றோங்கிய அமுதமே வேல்உடை எம்மானே
தருப்பு காஇனன் விலகுறும் தணிகைவாழ் சாந்தசற் குணக்குன்றே.

77.
குன்று நேர்பிணித் துயரினால் வருந்திநின் சூரைகழல் கருதாத
துன்று வஞ்சகக் கள்ளனேன் நெஞ்சகத் துயர்அறுத் தருள்செய்வான்
இன்று மாமயில் மீதினில் ஏறிஇவ் வேழைமுன் வருவாயேல்
நன்று நன்றதற் கென்சொல்வார் தணிகைவாழ் நாதநின் அடியாரே.

78.
யாரை யுந்துணை கொண்டிலேன் நின்அடி இணைதுணை அல்லால்நின்
பேரை உன்னிவாழ்ந் திடும்படி செய்வையோ பேதுறச் செய்வாயோ
பாரை யும்உயிர்ப் பரப்பையும் படைத்தருள் பகவனே உலகேத்தும்
சீரை உற்றிடும் தணிகைஅம் கடவுள்நின் திருவுளம் அறியேனே.

79.
உளங்கொள் வஞ்சக நெஞ்சர்தம் இடம்இர் உழந்தகம் உலைவுற்றேன்
வளங்கொள் நின்பத மலர்களை நாள்தொறும் வாழ்த்திலேன் என்செய்கேன்
குளங்கொள் கண்ணனும் கண்ணனும் பிரமனும் குறிக்கரும் பெருவாழ்வே
தளங்கொள் பொய்கைசூழ் தணிகைஅம் பதியில்வாழ் தனிப்பெரும் புகழ்த்தேவே.

80.
தேவர் நாயகன் ஆகியே என்மனச் சிலைதனில் அமர்ந்தோனே
முவர் நாயகன் எனமறை வாழ்த்திடும் முத்தியின் வித்தேஇங்
கேவ ராயினும் நின்திருத் தணிகைசென் றிறைஞ்சிடில் அவரேஎன்
பாவ நாசம்செய் தென்றனை ஆட்கொள்ளும் பரஞ்சுடர் கண்டாயே.

81.
கண்ட னேகவா னவர்தொழும் நின்திருக் கழல்இணை தனக்காசை
கொண்ட னேகமாய்த் தெண்டன்இட் டானந்தக் கூத்தினை உகந்தாடித்
தொண்ட னேனும்நின் அடியரில் செறிவனோ துயர்உழந் தலைவேனோ
அண்ட னேதிருத் தணிகைவாழ் அண்ணலே அணிகொள்வேல் கரத்தோனே

திருச்சிற்றம்பலம்.

5.
செழுஞ்சுடர் மாலை

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
திருச்சிற்றம்பலம்.

82.
ஊணே உடையே பொருளேஎன் றுருகி மனது தடுமாறி
வீணே துயரத் தழுந்துகின்றேன் வேறோர் துணைநின் அடிஅன்றிக்
காணேன் அமுதே பெருங்கருணைக் கடலே கனியே கரும்பேநல்
சேணேர் தணிகை மலைமருந்தே தேனே ஞானச் செழுஞ்சுடரே

83.
பாரும் விசும்பும் அறியஎனைப் பயந்த தாயும் தந்தையும்நீ
ஒரும் போதிங் கெனில்எளியேன் ஒயாத் துயருற் றிடல்நன்றோ
யாரும் காண உனைவாதுக் கிழுப்பேன் அன்றி என்செய்கேன்
சேரும் தணிகை மலைமருந்தே தேனே ஞானச் செழுஞ்சுடரே.

84.
கஞ்சன் துதிக்கும் பொருளேஎன் கண்ணே நின்னைக் கருதாத
வஞ்சர் கொடிய முகம்பார்க்க மாட்டேன் இனிஎன் வருத்தம்அறுத்
தஞ்சல் எனவந் தருளாயேல் ஆற்றேன் கண்டாய் அடியேனே
செஞ்சந் தனம்சேர் தணிகைமலைத் தேனே ஞானச் செழுஞ்சுடரே.

85.
மின்நேர் உலக நடைஅதனால் மேவும் துயருக் காளாகிக்
கல்நேர் மனத்தேன் நினைமறந்தென் கண்டேன் கண்டாய் கற்பகமே
பொன்னே கடவுள் மாமணியே போதப் பொருளே பூரணமே
தென்னேர் தணிகை மலைஅரசே தேவே ஞானச் செழுஞ்சுடரே

86.
வளைத்தே வருத்தும் பெருந்துயரால் வாடிச் சவலை மகவாகி
இளைத்தேன் தேற்றும் துணைகாணேன் என்செய் துய்கேன் எந்தாயே
விளைத்தேன் ஒழுகும் மலர்த்தருவே விண்ணே விழிக்கு விருந்தேசீர்
திளைத்தோர் பரவும் திருத்தணிகைத் தேவே ஞானச் செழுஞ்சுடரே.

87.
அடுத்தே வருத்தும் துயர்க்கடலில் அறியா தந்தோ விழுந்திட்டேன்
எடுத்தே விடுவார் தமைக்காணேன் எந்தாய் எளியேன் என்செய்கேன்
கடுத்தேர் கண்டத் தெம்மான்தன் கண்ணே தருமக் கடலேஎன்
செடித்தீர் தணிகை மலைப்பொருளே தேனே ஞானச் செழுஞ்சுடரே.

88.
உண்டால் குறையும் எனப்பசிக்கும் உலுத்தர் அசுத்த முகத்தைஎதிர்
கண்டால் நடுங்கி ஒதுங்காது கடைகாத் திரந்து கழிக்கின்றேன்
கொண்டார் அடியர் நின்அருளை யானோ ஒருவன் குறைபட்டேன்
திண்டார் அணிவேல் தணிகைமலைத் தேவே ஞானச் செழுஞ்சுடரே.

89.
வேட்டேன் நினது திருஅருளை வினையேன் இனிஇத் துயர்பொறுக்க
மாட்டேன் மணியே அன்னேஎன் மன்னே வாழ்க்கை மாட்டுமனம்
நாட்டேன் அயன்மால் எதிர்வரினும் நயக்கேன் எனக்கு நல்காயோ
சேட்டேன் அலரும் பொழில்தணிகைத் தேவே ஞானச் செழுஞ்சுடரே.

90.
கல்லா நாயேன் எனினும்எனைக் காக்கும் தாய்நீ என்றுலகம்
எல்லாம் அறியும் ஆதலினால் எந்தாய் அருளா திருத்திஎனில்
பொல்லாப் பழிவந் தடையும்உனக் கரசே இனியான் புகல்வதென்னே
செல்லார் பொழில்சூழ் திருத்தணிகைத் தேவே ஞானச் செழுஞ்சுடரே.

91.
அன்னே அப்பா எனநின்தாட்3 கார்வம் கூர்ந்திங் கலைகின்றேன்
என்னே சற்றும் இரங்கிலைநீ என்நெஞ் சோநின் நல்நெஞ்சம்
மன்னே ஒளிகொள் மாணிக்க மணியே குணப்பொன் மலையேநல்
தென்னேர் பொழில்சூழ் திருத்தணிகைத் தேவே ஞானச் செழுஞ்சுடரே

92.
நடைஏய் துயரால் மெலிந்து நினை நாடா துழலும் நான்நாயில்
கடையேன் எனினும் காத்தல்என்றன் கண்ணே நினது கடன்அன்றோ
தடையேன் வருவாய் வந்துன்அருள் தருவாய் இதுவே சமயம்காண்
செடிதீர்த் தருளும் திருத்தணிகைத் தேவே ஞானச் செழுஞ்சுடரே.

திருச்சிற்றம்பலம்

3.
நின் அருட்கார்வம்.

6.
குறைஇரந்த பத்து

எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
திருச்சிற்றம்பலம்

93.

சீர்பூத்த அருட்கடலே கரும்பே தேனே
செம்பாகே எனதுகுலத் தெய்வ மேநல்
கூர்பூத்த வேல்மலர்க்கை அரசே சாந்த
குணக்குன்றே தணிகைமலைக் கோவே ஞானப்
பேர்பூத்த நின்புகழைக் கருதி ஏழை
பிழைக்கஅருள் செய்வாயோ பிழையை நோக்கிப்
பார்பூத்த பவத்தில்உற விடில்என் செய்கேன்
பாவியேன் அந்தோவன் பயம்தீ ரேனே.

94.
தீராத துயர்க்கடலில் அழுந்தி நாளும்
தியங்கிஅழு தேங்கும்இந்தச் சேய்க்கு நீகண்
பாராத செயல்என்னே எந்தாய் எந்தாய்
பாவிஎன விட்டனையோ பன்னா ளாக
ஏராய அருள்தருவாய் என்றே ஏமாந்
திருந்தேனே என்செய்கேன் யாரும் இல்லேன்
சீராருந் தணிகைவரை அமுதே ஆதி
தெய்வமே நின்கருத்தைத் தெளிந்தி லேனே.

95.
தெளிக்குமறைப் பொருளேஎன் அன்பே என்றன்
செல்வமே திருத்தணிகைத் தேவே அன்பர்
களிக்கும்மறைக் கருத்தேமெய்ஞ் ஞான நீதிக்
கடவுளே நின்அருளைக் காணேன் இன்னும்
சுளிக்கும்மிடித் துயரும்யமன் கயிறும் ஈனத்
தொடர்பும்மலத் தடர்பும்மனச் சோர்வும் அந்தோ
அளிக்கும்எனை என்செயுமோ அறியேன் நின்றன்
அடித்துணையே உறுதுணைமற் றன்றி உண்ட .

96.
உண்டாய உலகுயிர்கள் தம்மைக் காக்க
ஒளித்திருந்தவ் வுயிர்வினைகள் ஒருங்கே நாளும்
கண்டாயே இவ்வேழை கலங்கும் தன்மை
காணாயோ பன்னிரண்டு கண்கள் கொண்டோ ய்
தண்டாத நின்அருட்குத் தகுமோ விட்டால்
தருமமோ தணிகைவரைத் தலத்தின் வாழ்வே
விண்டாதி தேவர்தொழும் முதலே முத்தி
வித்தேசொற் பதம்கடந்த வேற்கை யானே.

97.
கையாத அன்புடையார் அங்கைமேவும்
கனியேஎன் உயிரேஎன் கண்ணே என்றும்
பொய்யாத பூரணமே தணிகை ஞானப்
பொருளேநின் பொன்அருள்இப் போதியான் பெற்றால்
உய்யாத குறைஉண்டே துயர்சொல் லாமல்
ஓடுமே யமன்பாசம் ஓய்ந்து போம்என்
ஐயாநின் அடியரொடு வாழ்கு வேன்இங்
கார்உனைஅல் லால்எனக்கின் றருள்செய் வாயே.

98.
வாய்க்கும்உன தருள்என்றே அந்தோ நாளும்
வழிபார்த்திங் கிளைக்கின்றேன் வருத்தும் பொல்லா
நோய்க்கும்உறு துயர்க்கும்இலக் கானேன் மாழ்கி
நொந்தேன்நின் அருள்காணேன் நுவலும் பாசத்
தேய்க்கும்அவன் வரில்அவனுக் கியாது சொல்வேன்
என்செய்கேன் துணைஅறியா ஏழை யேனே
தூய்க்குமர குருவேதென் தணிகை மேவும்
சோதியே இரங்காயோ தொழும்பா ளர்க்கே.

99.
ஆளாயோ துயர்அளக்கர் வீழ்ந்து மாழ்கி
ஐயாவோ எனும்முறையை அந்தோ சற்றும்
கேளாயோ என்செய்கேன் எந்தாய் அன்பர்
கிளத்தும்உன தருள்எனக்குக் கிடையா தாகில்
நாளாய்ஓர் நடுவன்வரில் என்செய் வானோ
நாயினேன் என்சொல்வேன் நாணு வேனோ
தோளாஓர் மணியேதென் தணிகை மேவும்
சுடரேஎன் அறிவேசிற் சுகங்கொள் வாழ்வே.

100.
வாழ்வேநற் பொருளேநல் மருந்தே ஞான
வாரிதியே தணிமைமலை வள்ள லேயான்
பாழ்வேலை எனுங்கொடிய துயருள் மாழ்கிப்
பதைத்தையா முறையோநின் பதத்துக் கென்றே
தாழ்வேன்ஈ தறிந்திலையே நாயேன் மட்டும்
தயவிலையோ நான்பாவி தானோ பார்க்குள்
ஆழ்வேன்என் றயல்விட்டால் நீதி யேயோ
அச்சோஇங் கென்செய்கேன் அண்ணால் அண்ணால்

101.
அண்ணாவே நின்அடியை அன்றி வேறோர்
ஆதரவிங் கறியேன்நெஞ் சழிந்து துன்பால்
புண்ணாவேன் தன்னைஇன்னும் வஞ்சர் பாற்போய்ப்
புலந்துமுக வாட்டம்உடன் புலம்பி நிற்கப்
பண்ணாதே யாவன்இவன் பாவிக் குள்ளும்
படுபாவி என்றென்னைப் பரிந்து தள்ள
எண்ணாதே யான்மிகவும் ஏழை கண்டாய்
இசைக்கரிய தணிகையில்வீற் றிருக்கும் கோவே.

102.
கோவேநல் தணிகைவரை அமர்ந்த ஞான
குலமணியே குகனேசற் குருவே யார்க்கும்
தேவேஎன் விண்ணப்பம் ஒன்று கேண்மோ
சிந்தைதனில் நினைக்கஅருள் செய்வாய் நாளும்
பூவேயும் அயன்திருமால் புலவர் முற்றும்
போற்றும்எழில் புரந்தரன்எப் புவியும் ஓங்கச்
சேவேறும் பெருமான்இங் கிவர்கள் வாழ்த்தல்
செய்துவக்கும் நின்இரண்டு திருத்தாள் சீரே.

திருச்சிற்றம்பலம்

7.
ஜீவசாட்சி மாலை

எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
திருச்சிற்றம்பலம்

103.

பண்ஏறும் மொழிஅடியர் பரவி வாழ்த்தும்
பாதமலர் அழகினைஇப் பாவி பார்க்கில்
கண்ஏறு படும்என்றோ கனவி லேனும்
காட்டென்றால் காட்டுகிலாய் கருணை ஈதோ
விண்ஏறும் அரிமுதலோர்க் கரிய ஞான
விளக்கேஎன் கண்ணேமெய் வீட்டின் வித்தே
தண்ஏறு பொழிதணிகை மணியே ஜீவ
சாட்சியாய் நிறைந்தருளும் சகச வாழ்வே.

104.
பண்டுமன துவந்துகுணம் சிறிதும் இல்லாப்
பாவியேன் தனைஆண்டாய் பரிவால் இன்று
கொண்டுகுலம் பேசுதல்போல் எளியேன் குற்றம்
குறித்துவிடில் என்செய்கேன் கொடிய னேனைக்
கண்டுதிருத் தொண்டர்நகை செய்வார் எந்நாய்
கைவிடேல் உன்ஆணை காண்முக் காலும்
தண்துளவன் புகழ்தணிகை மணியே ஜீவ
சாட்சியாய் நிறைந்தருளும் சகச வாழ்வே.

105.
புன்புலைய வஞ்சகர்பால் சென்று வீணே
புகழ்ந்துமனம் அயர்ந்துறுகண் பொருந்திப் பொய்யாம்
வன்புலைய வயிறோம்பிப் பிறவி நோய்க்கு
மருந்தாய நின்அடியை மறந்தேன் அந்தோ
இன்புலைய உயிர்கொள்வான் வரில்என் பால்அவ்
வியமனுக்கிங் கென்சொல்கேன் என்செய் கேனே
தன்புகழ்காண் அருந்தணிகை மணியே ஜீவ
சாட்சியாய் நிறைந்தருளும் சகச வாழ்வே.

106.
பெருங்களப முலைமடவார் என்னும் பொல்லாப்
பேய்க்கோட்பட் டாடுகின்ற பித்த னேனுக்
கிரும்புலவர்க் கரியதிரு அருள்ஈ வாயேல்
என்சொலார்4 அடியர்அதற் கெந்தாய் எந்நாய்
கரும்பின்இழிந் தொழுகும்அருள் சுவையே முக்கண்
கனிகனிந்த தேனேஎன் கண்ணே ஞானம்
தரும்புனிதர் புகழ்தணிகை மணியே ஜீவ
சாட்சியாய் நிறைந்தருளும் சகச வாழ்வே.
4.
சொல்வர். தொ.வே. முதற்பதிப்பு.

107.
கல்அளவாம் நெஞ்சம்என வஞ்ச மாதர்
கண்மாயம் எனும்கயிற்றால் கட்டு வித்துச்
சொல்அளவாத் துன்பம்எனும் கடலில் வீழ்த்தச்
சோர்கின்றேன் அந்தோநல் துணைஓன் றில்லேன்
மல்அளவாய்ப் பவம்மாய்க்கும் மருந்தாம் உன்றன்
மலர்ப்பாதப் புணைதந்தால் மயங்கேன் எந்நாய்
சல்லம்5உலாத் தரும்தணிகை மணியே ஜீவ
சாட்சியாய் நிறைந்தருளும் சகச வாழ்வே.

108.
அன்னைமது லாம்பந்தத் தழுங்கி நாளும்
அலைந்துவயி றோம்பிமனம் அயர்ந்து நாயேன்
முன்னைவினை யாற்படும்பா டெல்லாம் சொல்லி
முடியேன்செய் பிழைகருதி முனியேல் ஐயா
பொன்னைநிகர் அருட்குன்றே ஒன்றே முக்கட்
&ஙதஇமணமே நறவேநற் புலவர் போற்றத்
தன்னைநிகர் தரும்தணிகை மணியே ஜீவ
சாட்சியாய் நிறைந்தருளும் சகச வாழ்வே.

109.
பன்னரும்வன் துயரால்நெஞ் சழிந்து நாளும்
பதைத்துருகி நின்அருட்பால் பருகக் கிட்டா
துன்னரும்பொய் வாழ்க்கைஎனும் கானத் திந்த
ஊர்நகைக்கப் பாவிமழல் உணர்ந்தி லாயோ
என்னருமை அப்பாஎன் ஐயா என்றன்
இன்னுயிர்க்குத் தலைவாஇங் கெவர்க்கும் தேவா
தன்னியல்சீர் வளர்தணிகை மணியே ஜீவ
சாட்சியாய் நிறைந்தருளும் சகச வாழ்வே.

110.
கோவேநின் பதம்பதுதியா வஞ்ச நெஞ்சக்
கொடியோர்பால் மனவருத்தம் கொண்டாழ் கின்றேன்
சாவேனும் அல்லன்நின்பொன் அருளைக் காணேன்
தமியேனை உய்யும்வண்ணம் தருவ தென்றோ
சேவேறும் சிவபெருமான் அரிதின் ஈன்ற
செல்வமே அருள்ஞானத் தேனே அன்பர்
தாவேதம் தெறும்தணிகை மணியே ஜீவ
சாட்சியாய் நிறைந்தருளும் சகச வாழ்வே.

111.
ஓயாது வரும்மிடியான் வஞ்சர் பால்சென்
றுளங்கலங்கி நாணிஇரந் துழன்றெந் நாளும்
மாயாத துயரடைந்து வருந்தித் தெய்வ
மருந்தாய நின்அடியை மறந்திட் டேனே
தாயாகித் தந்தையார்த் தமராய் ஞான
சற்குருவாய்த் தேவாகித் தழைத்த ஒன்றே
சாயாத புகழ்த்தணிகை மணியே ஜீவ
சாட்சியாய் நிறைந்தருளும் சகச வாழ்வே.

112.
மின்னாளும் இடைமடவார் அல்கு லாய
வெங்குழியில் வீழ்ந்தாழ்ந்து மெலிந்தேன் அல்லால்
எந்நாளும் உனைப்போற்றி அறியேன் என்னே
ஏழைமதி கொண்டேன்இங் கென்செய் கேனே
அன்னாய்என அப்பாஎன் றரற்றும் அன்பர்க்
காரமுதே அருட்கடலே அமரர் கோவே
தன்னார்வத் தமர்தணிகை மணியே ஜீவ
சாட்சியாய் நிறைந்தருளும் சகச வாழ்வே.

113.
வன்சொலினார் இடைஅடைந்து மாழ்கும் இந்த
மாபாவி யேன்குறையை வகுத்து நாளும்
என்சொலினும் இரங்காமல் அந்தோ வாளா
இருக்கின்றாய் என்னேநின் இரக்கம் எந்தாய்
இருள்அகற்றும் செழுஞ்சுடரே எவர்க்கும் கோவே
தன்சொல்வளர் தரும்தணிகை மணியே ஜீவ
சாட்சியாய் நிறைந்தருளும் சகச வாழ்வே.

114.
மீளாத வன்துயர்கொண் டீனர் தம்மால்
மெலிந்துநினை அழைத்தலறி விம்மா நின்றேன்
கேளாத கேள்விஎலாம் கேட்பிப் பாய்நீ
கேட்கிலையோ என்அளவில் கேள்வி இன்றோ
மதியேசிற் சுகஞான மழைபெய் விண்ணே
தாளாளர் புகழ்தணிகை மணியே ஜீவ
சாட்சியாய் நிறைந்தருளும் சகச வாழ்வே.

115.
மண்ணினால் மங்கையரால் பொருளால் அந்தோ
வருந்திமனம் மயங்கிமிக வாடி நின்றேன்
புண்ணியா நின்அருளை இன்னும் காணேன்
பொறுத்துமுடி யேன்துயரம் புகல்வ தென்னே
எண்ணினால் அளப்பரிய பெரிய மோன
இன்பமே அன்பர்தம திதயத் தோங்கும்
தண்ணினால் பொழில்தணிகை மணியே ஜீவ
சாட்சியாய் நிறைந்தருளும் சகச வாழ்வே.

116.
வஞ்சகராம் கானின்இடை அடைந்தே நெஞ்சம்
வருந்திஉறு கணவெயிலால் மாழாந் தந்தோ
தஞ்சம்என்பார் இன்றிஒரு பாவி நானே
தனித்தருள்நீர்த் தாகம்உற்றேன் தயைசெய் வாயோ
செஞ்சொல்மறை முடிவிளக்கே உண்மை ஞானத்
தேறலே முத்தொழில்செய் தேவர் தேவே
சஞ்சலம்நீத் தருள்தணிகை மணியே ஜீவ
சாட்சியாய் நிறைந்தருளும் சகச வாழ்வே.

117.
வாழாத வண்ணம்எனைக் கெடுக்கும் பொல்லா
வஞ்சகநெஞ் சால்உலகில் மாழாந் தந்தோ
பாழான மந்தையர்பால் சிந்தை வைக்கும்
பாவியேன் முகம்பார்க்கப் படுவ தேயோ
ஏழாய வன்பவத்தை நீக்கும் ஞான
இன்பமே என்அரசே இறையே சற்றும்
தாழாத புகழ்த்தணிகை மணியே ஜீவ
சாட்சியாய் நிறைந்தருளும் சகச வாழ்வே.

118.
உளந்தளர விழிசுருக்கும் வஞ்சர் பால்சென்
றுத்தமநின் அடியைமறந் தோயா வெய்யில்
இளந்தளிர்போல் நலிந்திரந்திங் சூழலும் இந்த
ஏழைமுகம் பார்த்திரங்காய் என்னே என்னே
வளந்தருசற் குணமலையே முக்கட் சோதி
மணியின்இருந் தொளிர்ஒளியே மயிலு'ர் மன்னே
தளந்தரும்ப&ஙதஇம் பொழில்தணிகை மணியே ஜீவ
சாட்சியாய் நிறைந்தருளும் சகச வாழ்வே.

119.
கல்லாத வஞ்சகர்பால் சென்று வீணாள்
கழித்து நிற்கும் கடையன்இவன் கருணை இல்லாப்
பொல்லாத பாவிஎன எண்ணி என்னைப்
புறம்போக்கில் ஐயாயான் புரிவ தென்னே
எல்லாம்செய் வல்லவனே தேவர் யார்க்கும்
இறைவனே மயில்ஏறும் எம்பி ரானே
சல்லாப வளத்தணிகை மணியே ஜீவ
சாட்சியாய் நிறைந்தருளும் சகச வாழ்வே.

120.
கன்னேய நெஞ்சகர்மாட் டணுகி ஐயோ
கரைந்துருகி எந்தாய்நின் கருணை கானா
தென்னேஎன் றேங்கிஅழும் பாவி யேனுக்
கிருக்கஇடம் இலையோநின் இதயங் கல்லோ
பொன்னேஎன் உயிர்க்குயிராய்ப் பொருந்து ஞான
பூரணமே புண்ணியமே புனித வைப்பே
தன்னேரில் தென்தணிகை மணியே ஜீவ
சாட்சியாய் நிறைந்தருளும் சகச வாழ்வே.

121.
பாவவினைக் கோர்இடமாம் மடவார் தங்கள்
பாழ்ங்குழிக்கண் வீழமனம் பற்றி அந்தோ
மாவல்வினை யுடன்மெலிந்திங் சூழல்கின் றேன்நின்
மலர்அடியைப் பேற்றேன்என் மதிதான் என்னே
தேவர்தொழும் பொருளேஎன் குலத்துக் கெல்லாம்
தெய்வமே அடியர்உளம் செழிக்கும் தேனே
தாவகன்றோர் புகழ்தணிகை மணியே ஜீவ
சாட்சியாய் நிறைந்தருளும் சகச வாழ்வே.

122.
கன்னியர்தம் மார்பிடங்கொண் டலைக்கும் புன்சீழ்க்
கட்டிகளைக் கருதிமனம் கலங்கி வீணே
அன்னியனாய் அலைகின்றேன் மயக்கம் நீக்கி
அடிமைகொளல் ஆகாதோ அருட்பொற் குன்றே
சென்னிமிசைக் கங்கைவைத்தோன் அரிதில் பெற்ற
செல்வமே என்புருக்கும் தேனே எங்கும்
தன்னியல்கொண் டுறும்தணிகை மணியே ஜீவ
சாட்சியாய் நிறைந்தருளும் சகச வாழ்வே.

123.
உள்ளமனக் குரங்காட்டித் திரியும் என்றன்
உளவறிந்தோ ஐயாநீ உன்னைப் போற்றார்
கள்ளமனக் குரங்குகளை ஆட்ட வைத்தாய்
கடையனேன் பொறுத்துமுடி கில்லேன் கண்டாய்
தெள்ளமுதப் பெருங்கடலே தேனே ஞானத்
தெளிவேஎன் தெய்வமே தேவர் கோவே
தள்ளரிய புகழ்த்தணிகை மணியே ஜீவ
சாட்சியாய் நிறைந்தருளும் சகச வாழ்வே.

124.
வந்தாள்வாய் ஐயாவோ வஞ்சர் தம்பால்
வருந்துகின்றேன் என்றலறும் மாற்றம் கேட்டும்
எந்தாய்நீ இரங்காமல் இருக்கின் றாயால்
என்மனம்போல் நின்மனமும் இருந்த தேயோ
கந்தாஎன் றுரைப்பவர்தம் கருத்துள் ஊறும்
கனிரசமே கரும்பேகற் கண்டே நற்சீர்
தந்தாளும் திருத்தணிகை மணியே ஜீவ
சாட்சியாய் நிறைந்தருளும் சகச வாழ்வே.

125.
ஊர்ஆதி இகழ்மாயக் கயிற்றால் கட்டுண்
டோ ய்ந்தலறி மனம்குழைந்திங் குழலு கின்றேன்
பார்ஆதி அண்டம்எலாம் கணக்கில் காண்போய்
பாவியேன் முகவாட்டம் பார்த்தி லாயோ
சீர்ஆதி பகவன்அருட் செல்வ மேஎன்
சிந்தைமலர்ந் திடஊறுந் தேனே இன்பம்
சார்ஆதி மலைத்தணிகை மணியே ஜீவ
சாட்சியாய் நிறைந்தருளும் சகச வாழ்வே.

126.
வாஎன்பார் இன்றிஉன தன்பர் என்னை
வஞ்சகன்என் றேமறுத்து வன்கணாநீ
போஎன்பார் ஆகில்எங்குப் போவேன் அந்தோ
பொய்யனேன் துணைஇன்றிப் புலம்பு வேனே
கோஎன்பார்க் கருள்தருமக் குன்றே ஒன்றே
குணங்குறிஅற் றிடஅருளும் குருவே வாழ்க்கைத்
தாஎன்பார் புகழ்த்தணிகை மணியே ஜீவ
சாட்சியாய் நிறைந்தருளும் சகச வாழ்வே.

127.
மாயைநெறி யாம்உலக வாழ்க்கை தன்னில்
வருந்திநினை அழைத்தலறி மாழ்கா நின்றேன்
தாயைஅறி யாதுவரும் சூல்உண் டோ என்
சாமிநீ அறியாயோ தயைஇல் லாயோ
பேயைநிகர் பாவிஎன நினைந்து விட்டால்
பேதையேன் என்செய்கேன் பெருஞ்சீர்க் குன்றே
சாயைகடல் செறிதணிகை மணியே ஜீவ
சாட்சியாய் நிறைந்தருளும் சகச வாழ்வே.

128.
மின்னைநிகர்ந் தழிவாழ்க்கைத் துயரால் நெஞ்சம்
மெலிந்துநின தருள்பருக வேட்டுநின்றேன்
என்னைஇவன் பெரும்பாவி என்றே தள்ளில்
என்செய்கேன் தான்பெறும்சேய் இயற்றும் குற்ற
அன்னைபொறுத் திடல்நீதி அல்ல வோஎன்
ஐயாவே நீபொறுக்கல் ஆகா தோதான்
தன்னைநிகர் தரும்தணிகை மணியே ஜீவ
சாட்சியாய் நிறைந்தருளும் சகச வாழ்வே.

129.
முந்தைவினை யால்நினது வழியில் செல்லா
முடனேன் தனைஅன்பர் முனிந்து பெற்ற
தந்தைவழி நில்லாத பாவி என்றே
தள்ளிவிடில் தலைசாய்த்துத் தயங்கு வேனே
எந்தைநின தருள்சற்றே அளித்தால் வேறோர்
எண்ணமிலேன் ஏகாந்தத் திருந்து வாழ்வேன்
சந்தனவான் பொழில்தணிகை மணியே ஜீவ
சாட்சியாய் நிறைந்தருளும் சகச வாழ்வே.

130.
பன்னகநொந் துறுவஞ்ச உலகில் நின்று
பரதவித்துன் அருட்கெதிர்போய்ப் பார்க்கின் றேன்நின்
பொன்னருளைப் புணர்ந்துமன மகிழ்ந்து வாழப்
புண்ணியனே நாயேற்குப் பொருத்தம் இன்றோ
பின்னைஒரு துணைஅறியேன் தனியே விட்டால்
பெருமநினக் கழகேயோ பேதை யாம்என்
தன்னைஅளித் தருள்தணிகை மணியே ஜீவ
சாட்சியாய் நிறைந்தருளும் சகச வாழ்வே.

திருச்சிற்றம்பலம்.

8.
ஆற்றா முறை

எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
திருச்சிற்றம்பலம்

131.
விண்அ றாதுவாழ் வேந்தன் ஆதியர்
வேண்டி ஏங்கவும் விட்டென் நெஞ்சகக்
கண்அ றாதுநீ கலந்து நிற்பதைக்
கள்ள நாயினேன் கண்டு கொண்டிலேன்
எண்அ றாத்துயர்க் கடலுள் முழ்கியே
இயங்கி மாழ்குவேன் குலவும் போரி6 வாழ்
சாமி யேதிருத் தணிகை நாதனே.
6.
போரி-திருப்போருர்

132.
வாட்கண் ஏழையர் மயலில் பட்டகம்
மயங்கி மால்அயன் வழுத்தும் நின்திருத்
தாட்கண் நேயம்அற் றுலக வாழ்க்கையில்
சஞ்ச ரித்துழல் வஞ்ச னேன்இடம்
ஆட்க ணேசுழல் அந்த கன்வரில்
அஞ்சு வேன்அலால் யாது செய்குவேன்
நாட்க ணேர்மலர்ப் பொழில்கொள் போரிவாழ்
நாய காதிருத் தணிகை நாதனே.

133.
எண்ணில் புன்தொழில் எய்தி ஐயவோ
இயல்பின் வாழ்க்கையில் இயங்கி மாழ்கியே
கண்ணின் உண்மணி யாய நின்தனைக்
கருதி டாதுழல் கபட னேற்கருள்
நண்ணி வந்திவன் ஏழை யாம்என
நல்கி ஆண்டிடல் நியாய மேசொலாய்
தண்இ ரும்பொழில் சூழும் போரிவாழ்
சாமி யேதிருத் தணிகை நாதனே.

134.
கூவி ஏழையர் குறைகள் தீரஆட்
கொள்ளும் வள்ளலே குறுகும் வாழ்க்கையில்
பாவி யேன்படும் பாட னைத்தையும்
பார்த்தி ருந்தும்நீ பரிந்து வந்திலாய்
சேவி யேன் எனில் தள்ளல் நீதியோ
திருவ ருட்கொரு சிந்து வல்லையோ
தாவி ஏர்வளைப் பயில்செய் போரிவாழ்
சாமி யேதிருத் தணிகை நாதனே.

135.
சந்தை நேர்நடை தன்னில் ஏங்குவேன்
சாமி நின்திருத் தாளுக் கன்பிலேன்
எந்தை நீமகிழ்ந் தென்னை ஆள்வையேல்
என்னை அன்பர்கள் என்சொல் வார்களோ
நிந்தை ஏற்பினும் கருணை செய்திடல்
நித்த நின்அருள் நீதி ஆகுமால்
தந்தை தாய்என வந்து சீர்தரும்
தலைவ னேதிருத் தணிகை நாதனே.

136.
செல்லும் வாழ்க்கையில் தியங்க விட்டுநின்
செய்ய தாள்துதி செய்தி டாதுழல்
கல்லும் வெந்நிடக் கண்டு மிண்டுசெய்
கள்ள நெஞ்சினேன் கவலை தீர்ப்பையோ
சொல்லும் இன்பவான் சோதி யேஅருள்
தோற்ற மேசுக சொருப வள்ளலே
சல்லி யங்கெட அருள்செய் போரிவாழ்
சாமி யேதிருத் தணிகை நாதனே.

137.
ஏது செய்குவ னேனும் என்றனை
ஈன்ற நீபொறுத் திடுதல் அல்லதை
ஈது செய்தவன் என்றிவ் வேழையை
எந்த வண்ணம்நீ எண்ணி நீக்குவாய்
வாது செய்வன்இப் போது வள்ளலே
வறிய னேன்என மதித்து நின்றிடேல்
தாது செய்மலர்ப் பொழில்கொள் போரிவாழ்
சாமி யேதிருத் தணிகை நாதனே.

138.
பேயும் அஞ்சுறும் பேதை யார்களைப்
பேணும் இப்பெரும் பேய னேற்கொரு
தாயும் அப்பனும் தமரும் நட்பும்ஆய்த்
தண்அ ருட்கடல் தந்த வள்ளலே
நீயும் நானும்ஓர் பாலும் நீருமாய்
நிற்க வேண்டினேன் நீதி ஆகுமோ
சாயும் வன்பவம் தன்னை நீக்கிடும்
சாமி யேதிருத் தணிகை நாதனே.

139.
பொய்யர் தம்மனம் புகுதல் இன்றெனப்
புனித நு'லெலாம் புகழ்வ தாதலால்
ஐய நின்திரு அருட்கி ரப்பஇங்
கஞ்சி நின்றென்இவ் விஞ்சு வஞ்சனேன்
மெய்யர் உள்ளுளே விளங்கும் சோதியே
வித்தி லாதவான் விளைந்த இன்பமே
தைய லார்இரு வோரும் மேவுதோள்
சாமி யேதிருத் தணிகை நாதனே.

140.
மாலின் வாழ்க்கையின் மயங்கி நின்பதம்
மறந்து ழன்றிடும் வஞ்ச நெஞ்சினேன்
பாலின் நீர்என நின்அ டிக்கணே
பற்றி வாழ்ந்திடப் பண்ணு வாய்கொலோ
சேலின் வாட்கணார் தீய மாயையில்
தியங்கி நின்றிடச் செய்கு வாய்கொலோ
சால நின்உளம் தான்எவ் வண்ணமோ
சாற்றி டாய்திருத் தணிகை நாதனே.

திருச்சிற்றம்பலம்.

9.
இரந்த விண்ணப்பம்

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
திருச்சிற்றம்பலம்

141.
நாளை ஏகியே வணங்குதும் எனத்தினம் நாளையே கழிக்கின்றோம்
ஊளை நெஞ்சமே என்னையோ என்னையோ உயர்திருத் தணிகேசன்
தாளை உன்னியே வாழ்ந்திலம் உயிர்உடல் தணந்திடல் தனைஇந்த
வேளை என்றறி வுற்றிலம் என்செய்வோம் விளம்பரும் விடையோமே.

142.
விடைய வாழ்க்கையை விரும்பினன் நின்திரு விரை மலர்ப் பதம்போற்றேன்
கடைய நாயினேன் எவ்வணம் நின்திருக் கருணைபெற் றுய்வேனே
விடையில் ஏறிய சிவபரஞ் சுடர்உளே விளங்கிய ஒளிக்குன்றே
தடையி லாதபேர் ஆனந்த வெள்ளமே தணிகைஎம் பெருமானே.

143.
பெருமை வேண்டிய பேதையில் பேதையேன் பெருந்துயர் உழக்கின்றேன்
ஒருமை ஈயும்நின் திருப்பதம் இறைஞ்சிலேன் உய்வதெப் படியேயோ
அருமை யாம்தவத் தம்மையும் அப்பனும் அளித்திடும் பெருவாழ்வே
தரும வள்ளலே குணப்பெருங் குன்றமே தணிகைமா மலையானே.

144.
மலையும் வேற்கணார் மையலில் அழுந்தியே வள்ளல்நின் பதம்போற்றோ
தலையும் இப்பெருங் குறையினை ஐயகோ யாவரோ டுரைசெய்கேன்
நிலைகொள் ஆனந்த நிருத்தனுக் கொருபொருள் நிகழ்த்திய பெருவாழ்வே
தலைமை மேவிய சற்குரு நாதனே தணிகையம் பதியானே.

145.
பதியும் அப்பனும் அன்னையும் குருவும்நற் பயன்தரு பொருளாய
கதியும் நின்திருக் கழல்அடி அல்லது கண்டிலன் எளியேனே
விதியும் மாலும்நின் றேத்திடும் தெய்வமே விண்ணவர் பெருமானே
வதியும் சின்மய வடிவமே தணிகைமா மலைஅமர்ந் திடுவாழ்வே.

146.
வாழும் நின்திருத் தொண்டர்கள் திருப்பதம் வழுத்திடா துலகத்தே
தாழும் வஞ்சர்பால் தாழும்என் தன்மைஎன் தன்மைவன் பிறப்பாய
ஏழும் என்னதே ஆகிய தையனே எவர்எனைப் பொருகின்றோர்
ஊழும் நீக்குறும் தணிகைஎம் அண்ணலே உயர்திரு வருள்தேனே.

147.
தேனும் தெள்ளிய அமுதமும் கைக்கும்நின் திருவருள் தேன்உண்டே
யானும் நீயுமாய்க் கலந்துற வாடும்நாள் எந்தநாள் அறியேனே
வானும் பூமியும் வழுத்திடும் தணிகைமா மலைஅமர்ந் திடுதேவே
கோனும் தற்பர குருவுமாய் விளங்கிய குமாரசற் குணக்குன்றே.

148.
குன்று பொய்உடல் வாழ்வினை மெய்எனக் குறித்திவண் அலைகின்றேன்
இன்று நின்திரு வருள்அடைந் துய்வனோ இல்லைஇவ் வுலகத்தே
என்றும் இப்படிப் பிறந்திறந் துழல்வனோ யாதும்இங் கறிகில்லேன்
நன்று நின்திருச் சித்தம்என் பாக்கியம் நல்தணி கையில்தேவே.

149.
தேவ ரும்தவ முனிவரும் சித்தரும் சிவன்அரி அயன்ஆகும்
முவ ரும்பணி முதல்வநின் அடியில்என் முடிஉற வைப்பாயேல்
ஏவ ரும்எனக் கெதிர்இலை முத்திவீ டென்னுடை யதுகண்டாய்
தாவ ரும்பொழில் தணிகையம் கடவுளே சரவண பவகோவே.

150.
வேயை வென்றதோள் பாவையர் படுகுழி விழுந்தலைந் திடும்இந்த
நாயை எப்படி ஆட்கொளல் ஆயினும் நாதநின் செயல்அன்றே
தாயை அப்பனைத் தமரினை விட்டுனைச் சார்ந்தவர்க் கருள்கின்றோய்
மாயை நீக்குநல் அருள்புரி தணிகைய வந்தருள் இந்நாளே.

திருச்சிற்றம்பலம்.

10.
கருணை மாலை

கலிவிருத்தம்

திருச்சிற்றம்பலம்

151.
சங்க பாணியைச் சதுமு கத்தனைச்
செங்கண் ஆயிரத் தேவர் நாதனை
மங்க லம்பெற வைத்த வள்ளலே
தங்க ருள்திருத் தணிகை ஐயனே.


152.
ஐய னேநினை அன்றி எங்கணும்
பொய்ய னேற்கொரு புகல்இ லாமையால்
வெய்ய னேன்என வெறுத்து விட்டிடேல்
மெய்ய னேதிருத் தணிகை வேலனே.

153.
வேலன் மாதவன் வேதன் ஏத்திடும்
மேலன் மாமயில் மேலன் அன்பர்உள்
சால நின்றவன் தணிகை நாயகன்
வால நற்பதம் வைப்பென் நெஞ்சமே.

154.
நெஞ்ச மேஇஃ தென்னை நின்மதி
வஞ்ச வாழ்வினில் மயங்கு கின்றனை
தஞ்சம் என்றருள் தணிகை சார்த்தியேல்
கஞ்ச மாமலர்க் கழல்கி டைக்குமே.

155.
கிடைக்குள் மாழ்கியே கிலம்செய் அந்தகன்
படைக்குள் பட்டிடும் பான்மை எய்திடேன்
தடைக்குள் பட்டிடாத் தணிகை யான்பதத்
தடைக்க லம்புகுந் தருள்செ ழிப்பனே.

156.
செழிக்கும் சீர்திருத் தணிகைத் தேவநின்
கொழிக்கும் நல்லருள் கொள்ளை கொள்ளவே
தழிக்கொண் டன்பரைச் சார்ந்தி லேன்இவண்
பழிக்குள் ஆகும்என் பான்மை என்னையோ.

157.
என்னை என்னைஈ தென்றன் மாதவம்
முன்னை நன்னெறி முயன்றி லேனைநின்
பொன்னை அன்னதாள் போற்ற வைத்தனை
அன்னை என்னும்நல் தணிகை அண்ணலே.

158.
அண்ணி லேன்நினை ஐய நின்அடி
எண்ணி லேன்இதற் கியாது செய்குவேன்
புண்ணி னேன்பிழை பொறுத்துக் கோடியால்
தண்ணின் நீள்பொழில் தணிகை அப்பனே.

159.
அப்பன் என்னுடை அன்னை தேசிகன்
செப்பன் என்குலத் தெய்வம் ஆனவன்
துப்பன் என்உயிர்த் துணைவன் யாதும்ஓர்
தப்பில் அன்பர்சேர் தணிகை வள்ளலே.

160.
வள்ளல் உன்அடி வணங்கிப் போற்றஎன்
உள்ளம் என்வசத் துற்ற தில்லையால்
எள்ளல் ஐயவோ ஏழைஎன் செய்கேன்
தள்ள ரும்பொழில் தணிகை வெற்பனே.

161.
வெற்ப னேதிருத் தணிகை வேலவனே
பொற்ப னேதிருப் போரி நாதனே
கற்ப மேல்பல காலம் செல்லுமால்
அற்ப னேன்துயர்க் களவு சாற்றவே.

162.
சாறு சேர்திருத் தணிகை எந்தைநின்
ஆறு மாமுகத் தழகை மொண்டுகொண்
டுறில் கண்களால் உண்ண எண்ணினேன்
ஈறில் என்னுடை எண்ணம் முற்றுமோ.

163.
முற்று மோமனம் முன்னி நின்பதம்
பற்று மோவினைப் பகுதி என்பவை
வற்று மோசுக வாழ்வு வாய்க்குமோ
சற்றும் ஓர்கிலேன் தணிகை அத்தனே.

164.
அத்த னேதணி காச லத்தருள்
வித்த னேமயில் மேற்கொள் வேலனே
பித்த னேன்பெரும் பிழைபொ றுத்திடில்
சுத்த அன்பர்கள் சொல்வர் ஏதமே.

165.
ஏதி லார்என எண்ணிக் கைவிடில்
நீதி யோஎனை நிலைக்க வைத்தவா
சாதி வான்பொழில் தணிகை நாதனே
ஈதி நின்அருள் என்னும் பிச்சையே.

166.
பிச்சை ஏற்றவன் பிள்ளை நீஎனில்
இச்சை ஏற்றவர்க் கியாது செய்குவாய்
பச்சை மாமயில் பரம நாதனே
கச்சி நேர்தணி கைக்க டம்பனே.

167.
கடப்ப மாமலர்க் கண்ணி மார்பனே
தடப்பெ ரும்பொழில் தணிகைத் தேவனே
இடப்ப டாச்சிறி யேனை அன்பர்கள்
தொடப்ப டாதெனில் சொல்வ தென்கொலோ.

168.
என்சொல் கேன்இதை எண்ணில் அற்புதம்
வன்சொ லேன்பிழை மதித்தி டாதுவந்
தின்சொ லால்இவண் இருத்தி என்றனன்
தன்சொல் செப்பரும் தணிகைத் தேவனே.

169.
தேவ நேசனே சிறக்கும் ஈசனே
பாவ நாசனே பரம தேசனே
சாவ காசனே தணிகை வாசனே
கோவ பாசனே குறிக்கொள் என்னையே.

170.
குறிக்கொள் அன்பரைக் கூடு றாதஇவ்
வெறிக்கொள் நாயினை வேண்டி ஐயநீ
முறிக்கொள் வாய்கொலோ முனிகொள் வாய்கொலோ
நெறிக்கொள் வோர்புகழ் தணிகை நித்தனே.

171.
தணிகை மேவிய சாமி யேநினை
எணிகை விட்டிடேல் என்று தோத்திரம்
அணிகை நின்அடிக் கயர்ந்து நின்றுவீண்
கணிகை போல்எனைக் கலக்கிற் றுள்ளமே.

172.
உள்ளம் நெக்குவிட் டுருகும் அன்பர்தம்
நள்அ கத்தினில் நடிக்கும் சோதியே
தள்அ ருந்திறல் தணிகை ஆனந்த
வெள்ள மேமனம் விள்ளச் செய்வையே.

173.
செய்வ தன்றவன் சிறிய னேன்றனை
வைவர் அன்பர்கள் என்னில் மத்தனேன்
உய்வ தெவ்வணம் உரைசெய் அத்தனே
சைவ நாதனே தணிகை மன்னனே.

174.
மன்னும் நின்அருள் வாய்ப்ப தின்றியே
இன்னும் இத்துயர் ஏய்க்கில் என்செய்கேன்
பொன்னின் அம்புயன் போற்றும் பாதனே
தன்னில் நின்றிடும் தணிகை மேலனே.

175.
மேலை வானவர் வேண்டும் நின்திருக்
காலை என்சிரம் களிக்க வைப்பையோ
சாலை ஓங்கிய தணிகை வெற்பனே
வேலை ஏந்துகை விமல் நாதனே.

176.
வேத மாமுடி விளங்கும் நின்திருப்
பாதம் ஏத்திடாப் பாவி யேன்தனக்
கீதல் இன்றுபோ என்னில் என்செய்கேன்
சாதல் போக்கும்நல் தணிகை நேயனே.

177.
நேயம் நின்புடை நின்றி டாதாஎன்
மாய நெஞ்சினுள் வந்தி ருப்பையோ
பேய னேன்பெரும் பிழைபொ றுத்திடத்
தாய நின்கடன் தணிகை வாணனே.

178.
வாணு தல்பெரு மாட்டி மாரொடு
காணு தற்குனைக் காதல் கொண்டனன்
ஏணு தற்கென தெண்ணம் முற்றுமோ
மாணு தற்புகழ்த் தணிகை வண்ணனே.

179.
வண்ண னேஅருள் வழங்கும் பன்னிரு
கண்ண னேஅயில் கரங்கொள் ஐயனே
தண்ண னேர்திருத் தணிகை வேலனே
திண்ணம் ஈதருள் செய்யும் காலமே.

180.
கால்கு றித்தஎன் கருத்து முற்றியே
சால்வ ளத்திருத் தணிகை சார்வன்என்
மால்ப கைப்பிணி மாறி ஓடவே
மேல்கு றிப்பனால் வெற்றிச் சங்கமே.

திருச்சிற்றம்பலம்

11.
மருண்மாலை விண்ணப்பம்

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
திருச்சிற்றம்பலம்

181.
சொல்லும் பொருளு மாய்நிறைந்த சுகமே அன்பர் துதிதுணையே
புல்லும் புகழ்சேர் நல்தணிகைப் பொருப்பின் மருந்தே பூரணமே
அல்லும் பகலும் நின்நாமம் அந்தோ நினைந்துன் ஆளாகேன்
கல்லும் பொருவா வன்மனத்தால் கலங்கா நின்றேன் கடையேனே.

182.
கடையேன் வஞ்ச நெஞ்சகத்தால் கலுழ்கின் னேன்நின் திருக்கருணை
அடையேன் அவமே திரிகின்றேன் அந்தோ சிறிதும் அறிவில்லேன்
விடையே றீசன் புயம்படும்உன் விரைத்தாள் கமலம் பெறுவேனோ
கொடைஏர் அருளைத் தருமுகிலே கோவே தணிகைக் குலமணியே.

183.
மணியே அடியேன் கண்மணியே மருந்தே அன்பர் மகிழ்ந்தணியும்
அணியே தணிகை அரசேதெள் அமுதே என்றன் ஆருயிரே
பிணிஏய் துயரால் வருந்திமனப் பேயால் அலைந்து பிறழ்கின்றேன்
தணியேன் தாகம் நின்அருளைத் தருதல் இலையேல் தாழ்வேனே.

184.
தாழ்வேன் வஞ்ச நெஞ்சகர்பால் சார்வேன் தனக்குள் அருள்தந்தால்
வாழ்வேன் இலையேல் என்செய்கேன் வருத்தம் பொறுக்க மாட்டேனே
ஏழ்வே தனையும் கடந்தவர்தம் இன்பப் பெருக்கே என்உயிரே
போழ்வேல் கரங்கொள் புண்ணியனே புகழ்சேர் தணிகைப் பொருப்பரசே.

185.
அரைசே அடியர்க் கருன்குகனே அண்ணா தணிகை ஐயாவே
விரைசேர் கடம்பமலர்ப்புயனே வேலா யுதக்கை மேலோனே
புரைசேர் மனத்தால் வருந்திஉன்றன் பூம்பொற் பதத்தைப் புகழ்கில்லேன்
தரைசேர் வாழ்வில் தயங்குகின்றேன் அந்தோ நின்று தனியேனே.

186.
தனியே துயரில் வருந்திமனம் சாம்பி வாழ்க்கைத் தளைப்பட்டிங்
கினிஏ துறுமோ என்செய்கேன் என்றே நின்றேற் கிரங்காயோ
கனியே பாகே கரும்பேஎன் கண்ணே தணிகைக் கற்பகமே
துனிஏய் பிறவி தனைஅகற்றும் துணையே சோதிச் சுகக்குன்றே.

187.
குன்றே மகிழ்ந்த குணக்குன்றே